மூடுக

வேளாண்மை

அரியலூர் மாவட்டம் விவசாய தொழில் சார்ந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 70% மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகிறார்கள். மாவட்டத்தின் சராசரி மழையளவு 954 மி.மீ. மற்றும் மொத்த நிலப்பரப்பானது 1933.38 சதுர கிலோ மீட்டராகும்.

நிலையான வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு தேவையை பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்கள் தேவையை பூர்த்தி செய்தல், மற்றும் ஊரக பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவை வேளாண்மை துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடாகவும் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய கால்வாய் பாசனம் புள்ளம்பாடி வாய்க்கால், நந்தியாறு மற்றும் பொன்னாறு மூலம் நடைபெறுகிறது. காவிரி பாசனம் மூலம் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன. பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வதே இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் முக்கிய பணியாகும். செம்மண், கரிசல் மண் மற்றும் களி மண் ஆகியன இம்மாவட்டத்தின் முக்கிய மண் வகைகளாகும். மொத்த நிலப்பரப்பான 193338 எக்டரில் 94725 எக்டர் சாகுபடி பரப்பாகும். மோத்த சாகுபடி பரப்பில் 36284 எக்டர் பரப்பு பாசன வசதி மூலமும், 58441 எக்டர் பரப்பு மானாவாரி மூலமும் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி நீர் மூலம் 10389 எக்டர் பரப்பில் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் சாகுபடி நடைபெறுகிறது. இத்துறையின் முக்கிய நோக்கம் உணவு தானிய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகும்.

வேளாண்மைத்துறை சார்பாக முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோத்தாரி சர்க்கரை ஆலை, அரியலூர் தாலுகா சாத்தமங்கலம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.
.

குறிக்கோள்:

விவசாயிகளுக்கு அன்றாடம் வேளாண் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், தரமான விதைகள் கிடைக்கச் செய்தல், தட்டுப்பாடின்றி உரங்கள், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் தொழில் நுட்பங்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதோடு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மூலப்பொருட்களின் உற்பத்தியினைப் பூர்த்தி செய்து வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்கிடவும், தற்போது வேளாண்மைக்கு தேவையான புதுமையான தொழில்நுட்பங்களை கொண்டு சேர்த்தல் ஆகியவையாகும்.

நோக்கம்:

  1. வேளாண்மைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை நிலைப்படுத்துதல்.
  2. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  3. இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் விவசாய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்தல்.

துறை உருவாக்கம்

அரியலூர் மாவட்டத்திற்கென வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் அரசாணை எண்: 74, வேளாண்மைத் துறை நாள்: 26.04.2012 ன்படி 01.07.2012 முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அமைவு (மற்றும்) வேளாண் பருவ கால சிறப்பியல்புகள்

மழையளவு

அரியலூர் மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு 954 மிமீ ஆகும். இம்மாவட்டம் அனைத்து பருவங்களிலும் மழை பெறுகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவ மழையினால் அதிக அளவு மழை பெறுகிறது.

வேளாண் காலநிலை மண்டலம்

தமிழ்நாடு மாநிலம் 7 வேளாண் காலநிலை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டம் காவிரி டெல்டா மண்டலத்தில் அமையப்பெற்றுள்ளது. வெப்பநிலையானது அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் நிலவி வருகிறது.

மண் வகைகள்

அரியலூர்  மாவட்டமானது சுண்ணாம்புக்கல் கலந்த இரும்பு சத்து மிகுந்த செந்நிற களிமண் நிறைந்த மாவட்டமாகும். மண்ணின் தன்மை பொதுவாக களிமண் ஆகவும், சிவப்பு நிறமாக மேற்பகுதியிலும், மஞ்சள் நிறமாக அடிப்பகுதியிலும் காணப்படுகிறது. மண்ணாணது நல்ல வடிகால் வசதியும், உப்பு மற்றும் கால்சியம் கார்பனேட் தன்மை இல்லாமலும், அமில அளவு 6.5 முதல் 8.0 வரையிலும் காணப்படுவதுடன், அங்ககத் தன்மை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து அளவு குறைந்தும் மற்றும் பொதுவாக சாம்பல் சத்து மற்றும் சுண்ணாம்பு அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் களிமண் கலந்த செம்மண்ணும், திருமானூர் மற்றும் அரியலூர் வட்டாரங்களில் கருப்பு நிற களிமண் காணப்படுகிறது.

பாசன ஆதாரங்கள்

வாய்க்கால், குளம், ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் ஆகியன இம்மாவட்டத்தினுடைய பாசனத்திற்கான ஆதாரங்களாகும். இதில் அதிக பகுதிகள் குழாய் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் பெறுகின்றன.

வாய்க்கால் பாசனம்:

அரியலூர்  மாவட்டமானது டெல்டா மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 41 வருவாய் கிராமங்கள் டெல்டா பகுதியின் கீழ் வருகின்றன. திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் மூன்று வகையான கால்வாய் பாசனம் மூலம் நெல், மற்றும் கரும்பு பயிர்கள் பாசன வசதி பெறுகின்றன.

புள்ளம்பாடி வாய்க்கால்:

புள்ளம்பாடி கால்வாய் முக்கொம்புவிலிருந்து துவங்குகிறது. இக்கால்வாய் 36 கிலோ மீட்டர் நீளம் உடையது. மேலும் இக்கால்வாய் 5 வகையான பாசன குளங்களை இணைக்கின்றது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் போது புள்ளம்பாடி கால்வாய் வருடந்தோறும் ஆகஸ்ட் முதல் நாள் திறக்கப்படும். இக்கால்வாயின் மூலம் திருமானூர் வட்டாரத்தில் சுமார் 6000 எக்டர் சாகுபடி நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது.

நந்தியாறு:

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் உள்ள நத்தமங்குடி கிராமத்திலிருந்து இந்த கால்வாய் துவங்குகிறது. இக்கால்வாய் 14 கிலோ மீட்டர் நீளம் உடையது. மேலும் இக்கால்வாய், வடிகால் மூலம் பெருவளை மற்றும் புள்ளம்பாடி கால்வாய் நீரினை பெறுகிறது. இக்கால்வாயின் மூலம் திருமானூர் வட்டாரத்தில் சுமார் 2000 எக்டர் சாகுபடி நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது.

பொன்னாறு:

திருமானூர் வட்டாரத்தில் உள்ள குருவாடி கிராமத்தின் கொள்ளிடம் ஆற்றில் இருந்து இந்த கால்வாய் துவங்குகிறது. இக்கால்வாய் 36 கிலோ மீட்டர் நீளம் உடையது. மேலும் இக்கால்வாய் 5 வகையான பாசன குளங்களை இணைக்கின்றது. இக்கால்வாயின் மூலம் தா.பழூர் வட்டாரத்தில் சுமார் 1877 எக்டர் சாகுபடி நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது.

வடவாறு:

தா.பழூர் வட்டாரத்தில் கொள்ளிடம் ஆற்றினுடைய கீழ்க்கட்டளை அணையிலிருந்து இந்த கால்வாய் துவங்குகிறது. இக்கால்வாய் 36 கிலோ மீட்டர் நீளம் உடையது. இக்கால்வாயின் மூலம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் சுமார் 463 எக்டர் சாகுபடி நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது.

முக்கியமான வேளாண்மைப் பயிர்கள்:

நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்புப் பயிர்கள் முக்கிய பயிர்களாக இம்மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த இயல்பான சாகுபடி பரப்பு 76400 எக்டர் ஆகும்.

மாவட்ட அளவிலான துறை நிர்வாக அமைப்பு:

மாவட்ட அளவிலான துறை நிர்வாக அமைப்பு

மாவட்ட அளவில் இத்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்தல், வழிநடத்துதல் மற்றும் திட்டங்களை செயல்படுத்துபவர் வேளாண்மை இணை இயக்குநர் ஆவார்.

வட்டார வாரியான துறை நிர்வாக அமைப்பு:

வட்டார வாரியான துறை நிர்வாக அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் ஆறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. இவ்வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் வேளாண்மை உதவி இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அனைத்து திட்டங்களும் வட்டார அளவிலே செயல்படுத்தப்படுகின்றன. வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரின் கீழ் வேளாண்மை அலுவலர், மற்றும் துணை வேளாண்மை அலுவலர் உள்ளனர். இவர்கள் இருவரும் திட்டப்பணிகளை சமமாக பிரித்து மேற்கொள்கின்றனர். வேளாண்மை அலுவலர், மூன்று உதவி வேளாண்மை அலுவலர்களையும், துணை வேளாண்மை அலுவலர் இரண்டு உதவி வேளாண்மை அலுவலர்களையும் கண்காணிக்கின்றனர். உதவி விதை அலுவலர் விதைப்பண்ணைகளை அமைத்து, அந்தந்த வட்டாரத்திற்கு தேவையான நெல், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர்களின் விதை தேவையை விதைப்பண்ணை அமைத்து, கொள்முதல் செய்வதன் மூலம் பூர்த்தி செய்கின்றனர். கிடங்கு மேலாளர் விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விற்பனை செய்யும் பணியை மேற்கொள்கின்றனா.

முக்கியத் திட்டங்கள் :

1. முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம் (CMDDM) :

மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யும் மனாவாரி நில விவசாயிகளின் இன்னல்களை தணிக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்திற்காக 100 எக்டர் மானாவாரி நிலம் கொண்ட தொகுப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள விவசாயிகளுக்கு தரமான விதைகள், உயிர் உரங்கள், இயற்கை இடுபொருள் மற்றும் ஜிப்சம் போன்றவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தொகுப்பிலுள்ள விவசாயிகளுக்கு இயந்திர வாடகை மையம் மற்றும் வேளாண் மதிப்பு கூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கு நிதியுதவி செய்யப்படுகிறது.

2. பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY-MI):

பண்ணை அளவில் நீர்ப்பயன்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் நுண்ணீர்பாசனம் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் விரும்பும் நுண்ணீர் பாசன நிறுவனம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விவசாயிகள், MIMIS வலைதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது வட்டார வேளாண்மை / தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பயன் பெற்று கொள்ளலாம்.

3. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் (SADS) :

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருமானத்தை பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்திட தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இயற்கை இடுபொருள் உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல், தார்பாய் விநியோகம், நெல் பயிரில் பயறு வகை வரப்பு பயிர் சாகுபடி, நெற்பயிருக்கான ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் விநியோகம், வேளாண் உபகரணங்கள் விநியோகம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் விநியோகம், வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்குதல் போன்ற இனங்கள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

4. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP) :

இத்திட்டமானது ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் மாவட்டத்திலுள்ள ஐந்தில் ஒரு பங்கு பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்படும். இத்தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்தவது ஆகும். இதன் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகள் விரிவான வளர்ச்சியை எட்டியிருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை சாகுபடிக்கு உகந்த நிலங்களாக கொண்டுவரும் நோக்கில், நீர் ஆதாரங்களை பெருக்குதல், சோலார் பம்ப் செட் விநியோகம், மதிப்பு கூட்டும் பண்ணைகளை அமைத்தல், நுண்ணீர் பாசனம், பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்குதல், கால்வாய்களில் வண்டல் மண் எடுத்தல் போன்ற பணிகள் மேற்கண்ட இதர துறைகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

5. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY):

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிர்காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும். இமாவட்டத்தில் முக்கிய வேளாண் பயிர்களான நெல், சோளம், பருத்தி , உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

6. பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதியுதவி திட்டம் (PM KISAN) :

இத்திட்டத்தில், சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக 01.12.2018 முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் (DBT) தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

7. மண் வள மேலாண்மை (SHM)

மண் வள மேலாண்மை நீடித்த நிலையான தேசிய வேளாண் இயக்கத்தின் முக்கிய அங்கமாகும். இத்திட்டத்தில் ஒருங்கிணைந்த உர சத்து மேலாண்மையானது தேவைக்கேற்ப உரங்கள், இரண்டாம் நிலை சத்துகள், நுண்ணூட்ட உரங்கள் இவற்றுடன் அங்கக உரங்கள், உயிர் உரங்கள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்வதாகும். அதன் மூலம் உற்பத்தியை கூட்டுவதாகும்.
இதனை மண் மற்றும் உரங்கள் ஆய்வு செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் தேவைக்கேற்ப உரம் பரிந்துரை செய்து மண்ணின் வளத்தை அதிகரிப்பதாகும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:

வட்டார அலுவலகங்கள்
வ.எண் வட்டார அலுவலகம் தொடர்பு எண் மின்னஞ்சல்
1 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, வாலாஜாநகரம், அரியலூர்-621704 9443180884 adaariyalur[at]gmail[dot]com
2 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கீழப்பழூர், திருமானூர் வட்டாரம், அரியலூர் மாவட்டம் 8072890022 adatmrnew[at]gmail[dot]com
3 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், செந்துறை, அரியலூர் மாவட்டம். 9884632588 adasendnew[at]gmail[dot]com
4 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், த.வளவெட்டிக்குப்பம், ஜெயங்கொண்டம் வட்டாரம், அரியலூர் மாவட்டம். 9750890874 adajkmblock[at]gmail[dot]com
5 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், விளந்தை (தெ), ஆண்டிமடம் வட்டாரம், அரியலூர் மாவட்டம் 9486164271 adaandimadam[at]gmail[dot]com
6 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தா.பழூர் வட்டாரம், அரியலூர் மாவட்டம். 8248928648 adatpl[at]gmail[dot]com

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

வேளாண்மை இணை இயக்குநர்,
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,
232, 2வது தளம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621 704.

தொலைபேசி எண்: 04329-228056
மின்னஞ்சல் : jdaariyalur[at]gmail[dot]com