மூடுக

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம்

1. அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,
வாலாஜா நகரம்,
அரியலூர் 621 704
2. துறையின் தலைமையகம் மற்றும் தொலைபேசி எண் : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை,
கிண்டி,
சென்னை – 600 032
தொலைபேசி எண் 044-22500900

இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, புதுப்பித்தல் போன்றவற்றை மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்வதற்கு பதிலாக இணையதளத்தில் Online-ல் பதிவு செய்யும் வசதியை பதிவுதாரர்கள் நலன்கருதி தமிழக அரசு வழங்கியுள்ளது.

”இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in

பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவினை தொடங்குவதற்கு முன்பு www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Guidelines-ஐ கவனமாக படித்து பார்க்க வேண்டும்.

பயனர் ஐடி :

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு எண் பயனர் ஐடி (User Id) ஆகும். வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வராமல் வெளியிடங்களில் புதிதாக பதிவு செய்வோர் User Id-ஐ தாங்களாகவே உருவாக்கி கொள்ள வேண்டும். User Id-ஐ இணையதளத்தில் பயன்படுத்தும்போது உபயோகிக்க வேண்டும்.

தங்களுடைய பதிவு எண்ணை பயன்படுத்துவதற்கு முன் அதனை 15 இலக்க எண்ணாக மாற்றம் செய்ய இணையதளத்தில் உள்ள Guidelines-ஐ கவனமாக படித்து பார்க்க வேண்டும்.

கடவுச்சொல்:

புதிதாக பதிவு செய்வோர் தங்களுக்கு உரிய Password-ஐ தாங்களாகவே உருவாக்கி அதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து நேரில் பதிவு செய்து உள்ளவர்கள் அவர்களுடைய பிறந்த தேதியினை DD/MM/YY என்ற முறையில் கடவுச்சொல் (PASSWORD) ஆக பயன்படுத்த வேண்டும்.

இணையதளத்தின் பயன்பாடுகள்

இணையதளத்தின் வாயிலாக புதிய பதிவு, புதுப்பித்தல் , கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்தல், மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம், பதிவுகளை சரிபார்த்தல்  போன்றவைகளை செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை PRINT OUT எடுத்துக்கொள்ளலாம்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இவ்விணையதளத்தில் விளம்பர பணிக்காலியிட விவரங்கள் வாரந்தோறும் வெளியிடப்படுகிது.போட்டித்தேர்வு விவரங்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் போன்ற பல்வேறு விவரங்களையும் இவ்விணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மெய்நிகர் கற்றல் வலைதளம்

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைதளம் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்விணையதளமானது தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வகுப்புகள் ஆகிய இத்துறையின் இன்றியமையா பணிகளின் மற்றுமொரு அங்கமாக தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்விணையதளம் TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRB, UPSC, SSC, AIRFORCE, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மின் வடிவத்தில் கற்கும் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மெய்நிகர் கற்றல் இணையதள முகவரி https://tamilnaducareerservices.tn.gov.in

சிறப்பம்சங்கள்

 • தொலைதூரக் கிராமப் பகுதிகளில் வசிக்கும் போட்டித்தேர்வுகளை மேற்கொள்ளும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து மென்பாடக்குறிப்புகளும் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இம்மென்பாடக்குறிப்புகள் ஆஃப்லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • இவ்விணையதளத்தில், மாணவர்கள் மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலி பாடக் குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
 • இதுமட்டுமின்றி இவ்விணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் விளம்பரப்படுத்தப்பட்ட காலிப்பணியிடங்கள், தேர்வு அறிவிக்கைகள் மற்றும் தொழில் தகவல்கள் ஆகியவை சரியான நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.
 • அலைபேசி வழியாக படிக்கும் பயனர்களின் வசதிக்காக இவ்விணையதளத்தில் அலைபேசி செயலியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசுத் துறையில் தனக்கான இடத்தை தேடும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் கனவை நினைவாக்க எவ்வகையிலாவது உதவி புரிய வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்.

தன்னார்வ பயிலும் வட்டம்

 • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவி புரியும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்துடன் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் 1999-ஆம் ஆண்டில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசுத்துறையில் வேலை பெற நினைக்கும் இளைஞர்களின் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இத்தன்னார்வ அலகுகள் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRB, AIRFORCE, UPSC, SSC, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 • இத்தன்னார்வ பயிலும் வட்டங்களில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மூலம் வருடம்தோறும் ஏறத்தாழ 500 மாணவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். மேலும், தேவைக்கேற்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கூடுதல் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
 • சிறப்பு முயற்சியாக விழிப்புலன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரெய்லி முறையிலும், செவிப்புலன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழிபெயர்பாளரைக் கொண்டும் போட்டித் தேர்வுகளை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 • மேலும், பத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற போட்டித் தேர்வுகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தொழில்நெறி வழிகாட்டும் செயல்பாடுகள்

எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல்  பட்டதாரிகள் வரை

 • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தொழில்நெறி வழிகாட்டுதல் என்பது முக்கியப் பணிகளில் ஒன்றாகும். இப்பணியை செம்மையாக மேற்கொள்ளும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பதிவுதாரர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் ஆகியோர் சரியான தொழில் பாதையை தேர்ந்தெடுப்பதற்கான பல்வேறு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மேற்கொள்ளப்படும் தொழில்நெறி வழிகாட்டுதல் செயல்பாடுகள் பின்வருமாறு:-
 • பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு தொழில்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
 • இக்கண்காட்சிகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு தொழில்நெறி உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. கையேடுகள், விளம்பரப் பதாகைகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை காட்சிப்படுத்துதல் ஆகியவை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கப்படுகின்றன.
 • பள்ளி ஆசிரியர்களுக்கு சமகால வேலை சந்தை நிலவரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகளில் தொழில்நெறி முனைகள் அமைத்து மாணவர்களுக்கு அவற்றை தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டியாளர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பதிவுதாரர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 • அலுவலக வளாகங்களில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகளை வழங்கும் மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் பதிவு செய்தல் குறித்து தேர்வர்களுக்கு வழிகாட்டுதல்.
 • மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், திறன் பயிற்சிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல். அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றில் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சமூகத்தில் சிறப்புப்பிரிவினராகக் கருதப்படுபவர்களுக்கு சிறப்பு கவனம் மற்றும் கவனம் செலுத்தப்படாத தொழில் துறைகளில் வேலைவாய்ப்பை தேர்வு செய்யும் வகையில் பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 1. விமானப்படை தேர்ச்சிக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

  இந்திய விமானப்படை தேர்வுகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள், பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகின்றன. இவ்வனைத்து நிகழ்ச்சிகளிலும் விமானப்படையின் முதுநிலை அலுவலர்கள் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களிடம் இந்திய விமானப்டையில் சேர்வதற்கான பல்வேறு வழிகள் குறித்து உரையாற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து வேலை பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

 2. தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சிறப்பு

  பயிற்சி வகுப்புகள்

  • போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் செவிப்புலன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டும், பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரெய்லி வழியாகவும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் பல்வேறு தன்னார்வ பயிலும் வட்டங்களில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெற விரும்பும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்களின் இடைவிடாத முயற்சிகளின் காரணமாக 50 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் வெற்றி பெற்று அரசு துறையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
 3. திருநங்கைகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள்

  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் திருநங்கை மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.தொழில் வாய்ப்புகள் மற்றும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அத்துறை தொடர்பான வல்லுநர்களைக் கொண்டு உரைகள் நிகழ்த்தப்படுகின்றன.

 4. தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்

  ஒவ்வொரு ஆண்டும் ஜீலை மாதத்தில் இரண்டாவது வாரம் மற்றும் ஜீலை பதினைந்தாம் நாள் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணர்வு வாரமாகவும் மற்றும் திறன் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாரம் முழுவதும் தொழில்நெறி ஆலோசனைகள் மற்றும் உரைகள், தொழில்நெறி கண்காட்சிகள், நடமாடும் ஊர்திகள் மூலம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிகள், திறன் பேரணிகள், திறன் முகாம்கள், ஐடிஐ மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், தொழில்நெறி மற்றும் திறன் பயிற்சிகள் குறித்து புத்தகங்கள் மற்றும் கையேடுகள் விநியோகித்தல், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு திறன் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

ஒரு நாள் ஒரு செயல்பாடு முயற்சி

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் செயல்பாடுகளில் சிறப்பு விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ‘ஒரு நாள் – ஒரு செயல்பாடு’ என்ற தனித்துவ முயற்சியாக வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு செயல்பாட்டிற்கான நாளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செயலாக்கப்பட்டு வருகிறது.

செயல்பாடுகள்

திறன் முகாம், திறன் மதிப்பீடு, மற்றும் திறன் பயிற்சிக்கான பதிவு, தொழில்நெறி வழிகாட்டல், தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள், தொழில்நெறி கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல், ஆசிரியர் -களுக்கான முதன்மை தொழில்நெறி வழிகாட்டியாளர் பயிற்சிபோட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் நடத்துதல், குழு கலந்துரையாடல், தனிநபர் வழிகாட்டல், உளவியல் ஆய்வு அனைத்து பதிவுதாரர்களுக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல், வேலைநாடுநர்கள், வேலையளிப்போர், பணிக்காலியிட விவரங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் சேகரித்தல்.

திறன் பயிற்சி பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி https://www.tnskill.tn.gov.in

வேலைநிலவர தகவல்

 • வேலைவாய்ப்பு நிலவர தகவல் அலகு வேலையின் கட்டமைப்பு, நிறுவனத்தின் தொழில் அமைப்பு, ஊழியர்களின் கல்வித் தகுதி பற்றிய தகவல்களை வழங்குகிறது மேலும் அதன் மூலம் மனிதவளத்தின் வழங்கல் மற்றும் தேவைக்கு இடையே உள்ள சமநிலை பற்றிய தகவலையும் வழங்குகிறது.
 • வேலைவாய்ப்பு நிலவர தகவல் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. EMI அலகுகளின் முதன்மையான செயல்பாடு, நிறுவனத்தை அடையாளம் காண்பது மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை சேகரித்தல் மற்றும் தொகுத்தல் மற்றும் அதன் மூலம் வழங்கல், தேவை மற்றும் மனிதவள தேவைகளுக்கான திட்டத்தை மதிப்பிட உதவுகிறது.
 • 25 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் தனியார் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விவசாயம் சாராத நிறுவனங்கள் தொடர்பான வேலைவாய்ப்புத் தரவுகள், வேலைவாய்ப்புப் பரிவர்த்தனைகள் கட்டாய அறிவிப்புச் சட்டம் 1959 மற்றும் 1960ன் விதிகளின் கீழ் சேகரிக்கப்படுகின்றன. இது ஒவ்வொரு காலாண்டுக்கும் சேகரிக்கப்பட்டு அறிக்கையாக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில், காலியிடங்கள் பற்றிய அறிவு, அந்த காலியிடங்களுக்கு தேவையான தகுதிகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அரசால் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான ஏரியா மார்க்கெட் அறிக்கையும்  தயாரிக்கப்படுகிறது.
 • வேலைவாய்ப்பு நிலவர  தகவலின் முக்கிய பயன்பாடானது, நேரடி பதிவேட்டில் காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் உறிஞ்சுதலை மதிப்பிடுதல், மனிதவளத்தின் தேவையை பூர்த்தி செய்தல், தொழில்முறை, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் திறமையான தொழிலாளர்களின் மனிதவள தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் உருவாக்கப்படக்கூடிய வேலைவாய்ப்புகள். அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேலைவாய்ப்பற்றோர்கான உதவித்தொகை திட்டம்

 • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நேரடிப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவும் நோக்கில் வேலையின்மை உதவித் திட்டம் தொடங்கப்பட்டது.
 • வயது வரம்பு மற்றும் வருமானம் போன்ற தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான  உதவித்தொகையை அரசாங்கம் வழங்குகிறது. தகுதிக்கான ஆண்டு வருமான அளவுகோல் ஆண்டுக்கு ரூ.72,000/- மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள். பட்டியல் வகுப்பினர்  மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 45 ஆகும். எஸ்எஸ்எல்சி தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம்  ரூ.300, எச்எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம்  ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600/- வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ஒவ்வொரு காலாண்டிலும் ECS மூலம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்

 • மாற்றுத் திறனாளி வேலை தேடுபவர்களுக்கு வேலையின்மை உதவியும் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் இந்த உதவியைப் பெறுவதற்கான அளவுகோல், அவர்கள் ஒரு வருடத்திற்கு நேரடிப் பதிவேட்டில் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், பெற்றோரின் வருமானம் மற்றும் வயதுக்கு எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு பத்து வருட காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்வியறிவற்ற மற்றும்  எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/- வேலைவாய்ப்பின்மை உதவித் தொகையும், எச்எஸ்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000/- வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வித்தொலைக்காட்சியில் அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 

ஒளிபரப்பு நேரம் திங்கள் முதல் வெள்ளி வரைகாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிப்பரப்பு நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் 9 வரை
  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்,
  • தமிழ்நாடு சீருடைப்பணியார் தேர்வு வாரியம்
  • ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்·
  • பணியாளர் தேர்வாணையம்
  • இரயில்வே தேர்வு வாரியம்
  • வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம்

போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், கலந்துரையாடல்கள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் ஆய்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவை இந்நிகழ்ச்சியில் ஒளிப்பரப்படும்·

 • இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment என்ற YouTube Channel-ல் அடுத்தடுத்த நாட்களில் காணலாம். மேலும்   https://tamilnaducareerservices.tn.gov.in/   என்ற இணையதளத்தில் இவ்வனைத்து தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலைவரிசை எண்
.எண் தொலைக்காட்சி விபரம் அலைவரிசை எண்
1. Airtel DTH 821
2. Sun DTH 33
3. TATA Sky DTH 1554
4. VIDEOCON d2h 597
தனியார் கேபிள் (MSOs)
1. TAC TV 200
2. TCCL 200
3. VK DIGITAL 55
4. AKSHAYA 17
5. SCV 98
6. GTPL 99

Tamilnadu Career Services Youtube Channel

அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தால் (All India Civil Service Coaching Centre) வெளியிடப்படும் போட்டித்தேர்வுகள் குறித்து விவரங்கள் மற்றும் UPSC போட்டித்தேர்வுக்கு நடத்தப்படும் காணொளிகளை காண்பதற்கு ஏதுவாக கீழ்கண்ட Youtube Channel Video Link-னை போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.https://www.youtube.com/watch?v=Up7hKRDlfL4

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையங்களில் தற்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.  அம்முகாம்களில் பல்வேறு துறையைச்சார்ந்த வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு அவர்களது கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலையளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு தனியார் வேலை இணையம் :-  www.tnprivatejobs.tn.gov.in

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களையும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக தமிழ்நாடு தனியார்வேலை இணையதளம் உள்ளது. இவ்விணையத்தில் தனியார்துறையில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ள வேலைநாடுநர்கள்  தங்களது கல்வித்தகுதியினை பதிவு செய்து இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகை செய்யப்படுள்ளது.. எனவே மேற்காணும் இணையதள முகவரியில் வேலைநாடுநர்கள் தங்களது கல்வித்தகுதியினை பதிவு    செய்து கொள்ளலாம்.