மூடுக

வேளாண்மை

அரியலூர் மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தின் முக்கிய பிரிவாக வேளாண்மைத் தொழில் தொடர்ந்து இருந்து வருகிறது. 70 சதவிகித மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களைச் செய்து வருகிறார்கள். மாவட்டத்தினுடைய மொத்த பரப்பானது 1933.38 சதுர கிலோ மீட்டராகும். இதில் மொத்த பயிர் பரப்பானது 1.118 இலட்சம் எக்டேராகும். நிலையான வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தேவையைப் பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடாகவும் இருந்து வருகிறது.

பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாகவும் அது தொடர்பான தொழில் நுட்பங்களை விளம்பரப்படுத்துதல் மூலமாகவும் வேளாண்மை துறையானது உணவு உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சியினை அடைவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உற்பத்தியினை அதிகப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், விதை கிராமத் திட்டம், தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், மண் வள அட்டை இயக்கம், மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத் தொழில் நுட்பங்கள் ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிர் பரவலாக்கம் மூலம் அதிக வருமானம் கிடைப்பதோடு, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் கிடைப்பதனால் உழவுத் தொழில் செய்பவர்களுடைய பொருளாதார நிலை உயருகின்றது.

அரியலூர் மாவட்டத்தினுடைய மொத்த புவியியல் பரப்பானது 193338 எக்டேராகும். இதில் பயிர் சாகுபடி பரப்பானது 111874 எக்டேராகும். மேலும் இவற்றில் 45136 எக்டேர் நீர் பாசனம் பெறும் பகுதியாகும். மீதமுள்ள 66738 எக்டேர் மானாவாரி பகுதியாகும். காவிரி நதி கிளைகள் மூலம் 10389 எக்டேர் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. சராசரி வருடாந்திர மழை அளவானது 954 மி.மீஆகும். அரியலூர் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் இம்மாவட்டத்தினுடைய மக்களுக்கு வேளாண்மை முதன்மைத் தொழிலாகத் திகழ்கிறது.

குறிக்கோள்:

விவசாயிகளுக்கு அன்றாடம் வேளாண் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், தரமான விதைகள் வழங்குதல், தரமான இரசாயன உரங்களைக் கிடைக்கச் செய்வதோடு அதன் விநியோகத்தைக் கண்காணித்தல், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் தொழில் நுட்பங்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பதோடு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மூலப்பொருட்களின் உற்பத்தியினைப் பூர்த்தி செய்து வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பணிகளை வேளாண்மைத் துறை செய்து வருகிறது.

நோக்கம்:

  1. வேளாண்மைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை நிலைப்படுத்துதல்.
  2. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  3. இரண்டு மடங்கு உற்பத்தி மூன்று மடங்கு வருமானம் விவசாய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்தல்.

துறையின் தோற்றம்

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அரசாணை எண். (MS) 74 வேளாண்மைத்துறை, நாள்: 26.04.2012-ன்படி தனியாக தோற்றுவிக்கப்பட்டு 01.07.2012 முதல் செயல்பட்டு வருகிறது.

அமைவு (ம) வேளாண் பருவகால சிறப்பியல்புகள்

மழையளவு

சராசரி மழையளவானது 954 மி.மீ ஆகும். இம்மாவட்டம் அனைத்து பருவகாலங்களிலும் மழை பெறுகின்றது. இருப்பினும் அதிகமான மழையளவு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கப்பெறுகின்றது.

வேளாண் காலநிலை மண்டலம்

தமிழ்நாடு 7 பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மண்டல எண் -V. அதாவது காவிரி டெல்டா மண்டலம் (CDZ). வெப்பநிலை அதிகபட்சமாக 38℃-லிருந்து குறைந்தபட்சமாக 24℃ வரை நிலவி வருகிறது.

மண் வகைகள்

சுண்ணாம்புக்கல் கலந்த இரும்புச் சத்து மிகுந்த செந்நிற களிமண் (Ferruginous red loam) -ஆக அரியலூர் மாவட்டத்தினுடைய நிலத்தின் தன்மை உள்ளது. மண்ணின் தன்மை பொதுவாக களிமண் ஆகவும், சிவப்பு நிறமாக மேற்பகுதியிலும், மஞ்சள் நிறமாக அடிப்பகுதியிலும் காணப்படுகிறது. மண்ணின் மத்திய ஆழத்தில் நல்ல வடிகால் வசதியும், உப்பு மற்றும் காரத் தன்மை இல்லாமலும் PH 6.5-லிருந்து 8 வரையிலும் காணப்படுவதுடன் அங்ககத் தன்மை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து அளவு குறைந்தும் மற்றும் பொதுவாக சாம்பல் சத்து மற்றும் சுண்ணாம்பு அளவு அதிகமாகவும் காணப்படுகிறது.
செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் செம்மை சரளைமண் காணப்படுகிறது. திருமானூர் மற்றும் அரியலூர் வட்டாரங்களில் கரிசல் மண் காணப்படுகிறது.

பாசன ஆதாரங்கள்

வாய்க்கால், குளம், ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் ஆகியன இம்மாவட்டத்தினுடைய பாசனத்திற்கான ஆதாரங்களாகும். இதில் அதிக பகுதிகள் குழாய் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் பெறுகின்றன.

வாய்க்கால் பாசனம்:

இம்மாவட்டம் டெல்டா மாவட்ட நிலையின் கீழ் வருகின்றது. 41 வருவாய் கிராமங்கள் டெல்டா பகுதியின் கீழ் வருகின்றன. திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் மூன்று வகையான வாய்க்கால் பாசனத்தின் மூலம் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் பாசன வசதி பெறுகின்றன.

புள்ளம்பாடி வாய்க்கால்:

இந்த வாய்க்கால் முக்கொம்பிலிருந்து துவங்குகிறது. இதன் நீளம் 36 கி.மீ ஆகும். இது 5 வகையான பாசன குளங்களை இணைக்கிறது. மேட்டூர் அணை 90 அடி நீர் அளவினை எட்டும்போது ஆகஸ்ட் முதல் தேதியன்று இவ்வாய்க்கால் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமானூர் வட்டாரத்தில் 6000 எக்டேர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

நந்தியாறு:

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்திலுள்ள நத்தமாங்குடி கிராமத்திலிருந்து இவ்வாய்க்கால் துவங்குகிறது. இதனுடைய நீளம் 14 கி.மீ. ஆகும். இந்த வடிகால் வாய்க்கால் பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வடிகால் நீரைப் பெறுகின்றது. திருமானூர் வட்டாரத்தில் 2000 எக்டேர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசனவசதி பெறுகின்றது.

பொன்னாறு:

திருமானூர் வட்டாரத்திலுள்ள குருவாடி கிராமத்தின் கொள்ளிடம் ஆற்றிலிருந்து இந்த வாய்க்கால் துவங்குகிறது. இதன் நீளம் 36 கி.மீ. ஆகும். 5 பாசன குளங்களை இணைக்கிறது. தா.பழூர் வட்டாரத்தில் 1877 எக்டேர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றது.

வடவாறு:

தா.பழூர் வட்டாரத்தில் கொள்ளிடம் ஆற்றினுடைய கீழ்க்கட்டளை அணையிலிருந்து இந்த வாய்க்கால் துவங்குகிறது. இதன் நீளம் 6 கி.மீ. ஆகும். ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் 463 எக்டேர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசனவசதி பெறுகின்றது.

முக்கியமான வேளாண்மைப் பயிர்கள்:

நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்புப் பயிர்கள் முக்கிய பயிர்களாக இம்மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறன. மொத்த இயல்பான சாகுபடி பரப்பு 76400 எக்டேர்.

மாவட்ட அளவிலான துறை நிர்வாக அமைப்பு:

மாவட்ட அளவிலான துறை நிர்வாக அமைப்பு

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் மற்றும் செயல்படுத்தும் அதிகாரியாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் செயல்படுகிறார். மேலும் வேளாண்துறையுடன் தொடர்புடைய அனைத்து சகோதரத் துறைகளுக்கும் தொடர்பு அதிகாரியாக செயல்படுகிறார்.

வட்டார வாரியான துறை நிர்வாக அமைப்பு:

வட்டார வாரியான துறை நிர்வாக அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் 6 வேளாண்மை விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வேளாண்மை விரிவாக்க மையத்தின் தலைமை அலுவலராக வேளாண்மை உதவி இயக்குநர் செயல்படுகிறார். அனைத்துத் திட்டங்களும் வட்டார அளவில் செயல்படுத்தப்படுகின்றன. வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களின் கட்டுப்பாட்டில் வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் செயல்படுகின்றனர். வேளாண்மை அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டில் 3 உதவி வேளாண்மை அலுவலர்களும் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டில் 2 உதவி வேளாண்மை அலுவலர்களும் பணிபுரிகின்றனர். உதவி விதை அலுவலர் விதைப் பண்ணைகளை அமைத்து அந்தந்த வட்டாரத்திற்குத் தேவையான நெல், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் விதைகளை கொள்முதல் செய்வார். கிடங்கு மேலாளர் விதை மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வார்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:

வட்டார அலுவலகங்கள்
வ.எண் வட்டார அலுவலகம் தொடர்பு எண் மின்னஞ்சல்
1 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, வாலாஜாநகரம், அரியலூர்-621704 7010670907 adaariyalur@gmail[dot]com
2 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கீழப்பழூர், திருமானூர் வட்டாரம், அரியலூர் மாவட்டம் 8072890022 adatmr@gmail[dot]com
3 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், செந்துறை, அரியலூர் மாவட்டம். 9047249004 adasend@gmail[dot]com
4 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், த.வளவெட்டிக்குப்பம், ஜெயங்கொண்டம் வட்டாரம், அரியலூர் மாவட்டம். 9750890874 adajkm@gmail[dot]com
5 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், விளந்தை (தெ), ஆண்டிமடம் வட்டாரம், அரியலூர் மாவட்டம் 9842692807 adaandimadam@gmail[dot]com
6 வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தா.பழூர் வட்டாரம், அரியலூர் மாவட்டம். 9443092411 adatpl@gmail[dot]com

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

வேளாண்மை இணை இயக்குநர்,
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,
232, 2வது தளம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621 704.

தொலைபேசி எண்: 04329-228056
மின்னஞ்சல் : jdaariyalur@gmail[dot]com