மூடுக

மாவட்ட தொழில் மையம்


கூட்ட நடவடிக்கைகள்

மாவட்ட தொழில் மையத்தின் பணிகள்

  • மத்திய அரசின் ”PMEGP” மற்றும் மாநில அரசின் ”UYEGP” & ”NEEDS” ஆகிய திட்டங்கள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி, ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல்.
  • தொழில் நிறுவனங்களை இனம் கண்டு, தொழில் முனைவோர்க்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் இயந்திர தளவாடங்களை தேர்ந்தெடுத்தல் மற்றும் கொள்முதல் செய்தல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு திட்ட அறிக்கை தயாரித்து உதவுதல்.
  • புதிதாக தொழில் துவங்கும் தொழில் நிறுவனத்திற்கு, அரசு துறையின் மூலம் பெறப்படும் உரிமங்கள் மற்றும் தேவைகள் ஒற்றைச் சாளர தகவின் மூலம் பெற வசதி ஏற்படுத்தி தருதல்.
  • மத்திய மற்றும் மாநில அரசின் தொழில் கொள்கை மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்கள் மீதான விழிப்புணர்வுகள், கருத்தரங்கு, கலந்தாய்வு கூட்டம் நடத்துதல்.
  • உத்யோக் ஆதார் மெமோரண்டம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பதிவு செய்து (இணையதள முகவரி: https://udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx ) ஒப்புதல் வழங்குதல்.
  • தொழில் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  • மானியங்கள் ஒப்பளிப்பு மற்றும் பட்டுவாடா செய்தல்.
  • தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களை நடத்துதல்.
  • தொழில் நிறுவன உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (IIUS), குறு, மற்றும் சிறு நிறுவன குழும மேம்பாட்டு திட்டம் (MSECDP) மற்றும் பாரம்பரிய தொழில்களின் மீளுருவாக்கம் செய்ய நிதியளிக்கும் திட்டம் (SFURTI) போன்ற திட்டங்கள் மூலம் குழும தொழில் நிறுவனங்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் குழுமம் ஏற்படுத்த வசதியாக்கம் செய்தல்.
  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, பெரிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை பெற வசதி ஏற்படுத்துதல்.
  • வீட்டு மின்சாதன உபயோகப் பொருட்கள், இந்திய தரச்சான்று அடிப்படையில் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து செயல்படுத்துதல்.
  • குடிசை மற்றும் கைவினை தொழில் நிறுவனங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்குதல்.
  • மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படும் ஏற்றுமதி வழிகாட்டும் பிரிவின் கீழ் ஏற்றுமதியை மேம்படுத்துதல்.
  • நலிவடைந்த குறு, சிறு நிறுவனங்களை கண்டறிந்து புனரமைக்க ஏற்பாடு செய்தல்.
  • குறு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் சிறப்பு உதவி திட்டங்களை செயல்படுத்தி கண்காணித்தல்.
  • மத்திய மாநில அரசினால் வழங்கப்படும், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்தல்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)

  • குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் / உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற வேண்டும்.
  • இத்திட்டத்தின் கீழ் வியாபாரத்திற்கு ரூ.5 இலட்சம் வங்கிகள் மூலமாக 25 சதவிகித மானியத்துடன் கடனாக வழங்கப்படும். நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
  • கடன் பெறுவோரில் பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவிகிதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும். ஏனைய பிரிவினர்களாகிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர்,  முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் திட்ட முதலீட்டில் 5 சதவிகிதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும். எஞ்சிய தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற  இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்துடன் திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (GST Number  கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. மாற்று சான்றிதழ்
  2. குடும்ப அட்டை நகல்
  3. திட்ட அறிக்கை
  4. விலை பட்டியல்
  5. சாதி சான்றிதழ்
  6. ஆதார் கார்டு
  7. பாஸ்போர்ட் புகைப்படம்
  8. உறுதிமொழி பாத்திரம்

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)

  • படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம்” (NEEDS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் +2 மேல்நிலை தொழில்கல்வி, இளங்கலை /முதுகலை பட்ட படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ), ஐ.டி.ஐ, / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% (அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் வரை) முதலீட்டு மானியமும், 3% வட்டி மானியமும் அளிக்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 21க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
  • இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல், அதிகபட்சமாக ரூ.500.00 இலட்சம் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் துவங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 % செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. மாற்று சான்றிதழ்
  2. குடும்ப அட்டை நகல்
  3. திட்ட அறிக்கை
  4. விலை பட்டியல்
  5. சாதி சான்றிதழ்
  6. ஆதார் கார்டு
  7. பாஸ்போர்ட் புகைப்படம்
  8. உறுதிமொழி பாத்திரம்
  9. வாடகை ஒப்பந்த பத்திரம்

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (PMEGP)

சிறப்பம்சங்கள்

  • உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 இலட்ச ரூபாய் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 இலட்சம் வரையிலும் திட்டத்தின் அளவு அனுமதிக்கப்படும்.
  • 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
  • வருமான வரம்பில்லை.
  • ரூ.5.00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு சொத்து பிணையம் தேவையில்லை.
  • உற்பத்தி சார்ந்த தொழிலில் ரூ.10.00 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை சார்ந்த தொழிலில் ரூ.5.00 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
  • திட்ட மதிப்பீட்டில் ரூபாய். 3.00 இலட்சத்திற்கு குறைந்த பட்சம் ஒருவர் என்ற வீதத்தில் மொத்த திட்ட முதலீட்டிற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பளித்தல் கட்டாயமாகும். கூடுதலாக வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • வங்கிகள் பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அளவிலும், நலிவடைந்த பிரிவினருக்கு 95 சதவீதம் அளவிலும் கடன் ஒப்பளிப்பு செய்து, இணையதளம் வாயிலாக தொழில் முனைவோர் பயிற்சி முடித்தவருக்கு பணம் பட்டுவாடா செய்யபடும், பயிற்சி இன்றி வங்கிகள் பணம் பட்டுவாடா செய்யும் பட்சத்தில் மானியம் பெற இயலாது.
  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. மாற்று சான்றிதழ்
  2. குடும்ப அட்டை நகல்
  3. திட்ட அறிக்கை
  4. விலை பட்டியல்
  5. சாதி சான்றிதழ்
  6. ஆதார் கார்டு
  7. பாஸ்போர்ட் புகைப்படம்
  8. உறுதிமொழி பத்திரம்
  9. மக்கள் தொகை சான்றிதழ் (கிராம புறத்தில் தொழில் தொடங்க இருப்பின்)

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள்

முதலீட்டு மானியம்

தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகப்பட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும்.

தகுதிகள்

  • தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் 24 வகையான உந்துதல் தொழில்களை மேற்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
  • அரசால் அறிவிக்கப்பட்ட 254 தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
  • மாநிலத்தில் 388 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
  • மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில் துவங்கும் பொழுது.

குறைந்தழுத்த மின்மானியம்

20 விழுக்காடு குறைந்தழுத்த மின்மானியம் வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.

தகுதிகள்

தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள் துவங்கும் பொழுது.

மின்னாக்கி மானியம்

இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு, உற்பத்தி நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் (320 KVA) மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை மின்னாக்கி மானியம் வழங்கப்படுகிறது.

பின்முனை வட்டி மானியம்

குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் கடன் உத்திரவாத நிதி ஆதாரத் திட்டம் (CGTMSE) மூலம் பெறும் ரூ.2 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு கடனுக்கான வட்டியில் 5 விழுக்காடு என்ற அளவில் அதிகபட்சமாக ரூ.20 இலட்சம் வரை பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப்படுத்துதல் (TUF) மூலம் பெறும் ரூ.5 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு கடனுக்கான வட்டியில் 5 விழுக்காடு என்ற அளவில் அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.

ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிக்கும் திட்டம்(PEACE)

திட்டத்தின் நோக்கம்

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் உருவாக்கும்.
  • ஆற்றல  தணிக்கைகளை மேற்கொண்டு, ஆற்றல் திறனை அதிகரிக்கவும், எரிபொருள் சேமிக்கவும், மேலும் ஆற்றல் தணிக்கை அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தி அவற்றை கண்காணித்தல்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 75 விழுக்காடு ரூ.1,00,000-க்கு மிகாமல் மானியமாக வழங்குதல்.

  • ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 75 விழுக்காடு ரூ.1,00,000-க்கு மிகாமல் மானியமாக வழங்குதல்.
  • ஆற்றல் தணிக்கையை நடைமுறை படுத்த தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கூறுகளின் மதிப்பில் (Components) 50 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை மானியமாக வழங்குதல்.

தர சான்று பெறுவதற்கான மானியம்

தேசிய அளவிலான தரச்  சான்று பெற ஆகும் செலவினத்தில் 100 விழுக்காடு அதிகபட்சமாக ரூபாய் 200000/- வரையிலும் சர்வதேச தரச் சான்று பெற ஆகும் செலவினத்தில் 100 விழுக்காடு அதிகபட்சமாக ரூபாய் 1000000/- வரையிலும் தரச் சான்று பெறுவதற்கான மானியமாக வழங்கப்படும்.

முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களைத் திரும்பப் பெறுதல்  (Stamp Duty Registration)

குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் தொழிலக பயன்பாட்டிற்காக நிலம் வாங்கியிருப்பின் அதற்கான முத்திரைத்தாள் மதிப்பு மற்றும் பத்திர பதிவு கட்டணத்தில் 50 சதவிதம் மானியமாக வழங்கப்படும்.

அறிவுசார் சொத்துரிமைக்கான மானியம்

  • காப்புரிமை பதிவு சான்றிதழ் பெறுவதற்கான செலவினத்தில் 75 விழுக்காடு அதிகபட்சமாக ரூ. 3.00 லட்சம் வரைமானியமாக வழங்கப்படும்.
  • வணிக முத்திரை பதிவு மற்றும் புவிசார் குறியீடு பெறுவதற்கான 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ. 25,000/- வரை மானியமாக வழங்கப்படும்.

 சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் பங்குச்சந்தை

பரிமாற்றம் மூலம் நிதி திரட்டும் மானிய திட்டம்

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பங்குசந்தையில் நிதி திரட்டுவதற்காக ஆகும் செலவினத்தில் 20 விழுக்காடு அதிகபட்சமாக ரூ. 5.00 லட்சம் வரைமானியமாக வழங்கப்படும்.

சம்பள பட்டியல் மானியம்

20 ஊழியர்களுக்கு மேல் பணியில் அமர்த்தியுள்ள தொழில் நிறுவங்களுக்கு தொழிலார் வருங்கால வைப்பு நிதியின் நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு தொழிலாருக்கு ஒரு வருடத்திற்கு ரூபாய் 24,000/- வரை உற்பத்தி தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும்.

திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டம்

திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டமானது, வேலையில்லாத இளைஞா்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு தேவையான பயிற்சியினை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவனங்கள்  மாதம் ரூ.5000 வீதம் உதவித் தொகையை 6 மாதங்களுக்கு வழங்கப்படும். அதில் மாதம் ரூ.2000 வீதம் ஒரு பயிற்சியாளருக்கு தமிழ்நாடு அரசால் அந்நிறுவனங்களுக்கு பயிற்சியின் முடிவில் மானியமாக திரும்ப அளிக்கப்படும்.
பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.(TNSDC).

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர தகவு

தமிழ்நாடு அரசு தொழில் துவங்க முன்வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் ஆதரவும் அளித்து வருகிறது.  தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க தேவையான பல்வேறு வகையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை ஒற்றைச் சாளர தகவின் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர்களுக்கு உகந்த மற்றும் முதலீட்டாளா்களுக்கு இயைந்த சூழலை உருவாக்குவதில் மாநிலத்திற்கு உள்ள விருப்பத்தினை வெளிப்படுத்தும் வகையில்  தமிழ்நாடு அரசானது, 11 துறைகளின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமங்கள் மற்றும் அனுமதிகளை குறித்த காலத்திற்குள் வெளிப்படையான வகையில் இணையதளம் வழியாக முதலீட்டாளர்களுக்கு பெற்று வழங்கிட இணையதள ஒற்றைச் சாளர தகவினை உருவாக்கியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை    https://tnswp.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் மாவட்ட தொழில் மையத்தின் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்

அலுவலக முகவரி :

பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
531/21, ஜெயங்கொண்டம் ரோடு,
வாலாஜாநகரம்,
அரியலூர். 621704
தொலைபேசி. 04329 – 228555, 228556, 89255 33925, 89255 33926
மின்னஞ்சல் : dicariyalur[at]gmail[dot]com