மூடுக

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்

பள்ளிக்  கல்வி உதவித்தொகைத் திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும்,   10-ஆம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணச் சலுகை

பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான தேர்வுக் கட்டணம் அரசு தேர்வுத் துறை இயக்குநருக்கு இத்துறையால் ஈடுசெய்யப்படுகிறது.

நிபந்தனைகள்

 • பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு – பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு– நிபந்தனைகள் ஏதுமில்லை.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நிலையில் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு தேர்வுக் கட்டணம் ஈடு செய்யப்படுகிறது. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இத்தேர்வுக் கட்டணம் ஈடு செய்யப்படுகிறது.

கல்லூரி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை

ஐ.டி.ஐ, பட்டயப்படிப்பு, பட்டமேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் அரசு கல்வி நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் வழங்கப்படுகிறது. தேர்வுக் கட்டணம் முழுமையாகவும், புத்தகக் கட்டணம் கல்வி உதவித்தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறும் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இரண்டாவது முறை மாற்றம் (Second Shift) வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் காலை நேர அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் அதே விதி முறைகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகையினை பெற பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், கல்வி நிலையங்களே நடத்தும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு மேற்படி கல்வி உதவித்தொகையுடன் உண்டி, உறையுள் கட்டணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் முதுகலைப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 2021-22 ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட உண்டி உறையுள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.400/- என்ற விகிதத்தில் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு என மொத்தம் ரூ.4000/- வழங்கப்படுகிறது.

இலவசக் கல்வி உதவித்தொகை

பட்டப்படிப்பு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டு இளங்கலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை அரசு நிர்ணயித்த அளவில் வழங்கப்படுகிறது (அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டு இளங்கலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது). புத்தகக் கட்டணம் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறும் மற்றும் தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகையுடன், கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2021-22 ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட உண்டி உறையுள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.400/- என்ற விகிதத்தில் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு என மொத்தம் ரூ.4000/- வழங்கப்படுகிறது.

பட்டயப்படிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (Polytechnics) பட்டயப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் அரசு நிர்ணயித்த அளவில் வழங்கப்படுகிறது. புத்தகக் கட்டணம் கல்வி உதவித்தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறும் மற்றும் தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டய / பட்டதாரியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், கல்வி நிலையங்களே நடத்தும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு மேற்படி கல்வி உதவித்தொகையுடன் 2021-22 ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட உண்டி உறையுள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.400/- என்ற விகிதத்தில் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு என மொத்தம் ரூ.4000/- வழங்கப்படுகிறது.

தொழிற்கல்விப் படிப்பு

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒற்றைச் சாளர முறையில் தேர்வு செய்யப்பட்டு தொழிற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் அரசு நிர்ணயித்த அளவில் வழங்கப்படுகிறது. புத்தகக் கட்டணம் கல்வி உதவித்தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறும் மற்றும் தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது. மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், கல்வி நிலையங்களே நடத்தும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு மேற்படி கல்வி உதவித்தொகையுடன் 2021-22 ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட உண்டி உறையுள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.400/- என்ற விகிதத்தில் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு என மொத்தம் ரூ.4000/- வழங்கப்படுகிறது.

கணினிமயமாக்கப்பட்ட கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்

கல்வி உதவித்தொகைத் திட்டங்கள், முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு www.bcmbcscholarship.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கல்வி உதவித்தொகை அந்தந்த துறை தலைமை அலுவலகங்கள் மூலமாகவே மையப்படுத்தப்பட்ட பணம் செலுத்தும் முறையில் மாணவ / மாணவியர்களது வங்கிகணக்கிற்கு நேரடியாக பட்டுவாடா செய்யப்படுகிறது.

கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை

கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ / மாணவியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ / மாணவியருக்கான கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்

 1. மாணவ / மாணவியர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 2. தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 3. ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
 4. பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
 5. இதர கல்வி உதவித்தொகை திட்டங்களைப் போன்றே (பள்ளி மேற்படிப்பு மற்றும் இலவசக் கல்வி – பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு (ம) தொழிற்கல்வி) இத்திட்டத்திலும் மாணவ / மாணவியரின் படிப்பிற்கான காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
 6. கல்வி நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணம் முதலான மொத்தத் தொகை அல்லது ரூ.2.00 இலட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.
 7. விண்ணப்பங்கள் அதிக எண்ணிக்கையில் பெறப்படின் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நலம்,
எழிலகம் இணைப்பு கட்டடம்,
2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5
தொலைபேசி எண். 044-28551462
மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship[at]gmail[dot]com
மேலும் சந்தேகங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விடுதிகள்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர் தங்களது கல்வியினை சிரமமின்றி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சேர்க்கைக்கான தகுதிகள்

பள்ளி விடுதி
 1. 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்
 2. பெற்றோர்களது ஆண்டு வருமானவரம்பு 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.2,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 3. மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். (மாணவியருக்கு இவ்விதி பொருந்தாது)
கல்லூரி விடுதி
 1. பட்டயம், பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்.
 2. பெற்றோர்களது ஆண்டு வருமானவரம்பு 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.2,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 3. மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். (மாணவியருக்கு இவ்விதி பொருந்தாது)

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் /சம்பந்தப்பட்ட விடுதியின் காப்பாளர் / காப்பாளினி.

விடுதிகளில் இட ஒதுக்கீடு முறை
விடுதிகள் வகுப்பு ஒதுக்கீடு விழுக்காடு
பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு 60%
மிகப்பிற்படுத்தப்பட்ட   வகுப்பு / சீர்மரபினர் வகுப்பு 20%
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 15%
இதர வகுப்பினர் 5 %
மொத்தம்
100%
மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு 60%
பிற்படுத்தப்பட்ட வகுப்பு / சீர்மரபினர் வகுப்பு 20%
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 15 %
இதர வகுப்பினர் 5%
மொத்தம்
100%
சீர்மரபினர் விடுதிகள் சீர்மரபினர் வகுப்பு 60%
பிற்படுத்தப்பட்ட  வகுப்பு  / மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு 20%
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 15%
இதர வகுப்பினர் 5%
மொத்தம்
100%

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் மற்றும் சாதி பற்றிய சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிப்பதற்கு பதிலாக அவர்கள் விடுதியில் இடம் கிடைத்த பின்னர் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விடுதியிலும் 4 விழுக்காடு இடங்கள் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள், விடுதிகளில் எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படவும், படிப்பு முடியும் வரை தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக விடுதியின் ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாடு, கேரள எல்லையோர தோட்டங்களில் தற்போது பணி புரியும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோரின் சுய உறுதிச் சான்றின் அடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விடுதிகள் மற்றும் ஒப்பளிக்கப்பட்ட மாணவ / மாணவியர் எண்ணிக்கை விவரம்
வ. எண் துறை விடுதிகள் விடுதிகளின் எண்ணிக்கை ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கை
மாணவர் மாணவியர் மொத்தம் மாணவர் மாணவியர் மொத்தம்
1 பிற்படுத்தப்பட்ட  வகுப்பு கல்லூரி 1 0 1 60 0 60
பள்ளி 7 7 14 345 400 745
மொத்தம் 8 7 15 405 400 805
2. மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு கல்லூரி 2 1 3 120 100 220
பள்ளி 12 2 14 620 105 725
மொத்தம் 14 3 17 740 205 945
ஆக மொத்தம்
22
10
32
1145
605
1750

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளின் விவரம்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள்

 1. கல்லூரி மாணவர் விடுதி, அரியலூர்
 2. பள்ளி மாணவர் விடுதி, மேலனிக்குழி
 3. பள்ளி மாணவர் விடுதி, அரியலூர்
 4. பள்ளி மாணவர் விடுதி, திருபுரந்தான்
 5. பள்ளி மாணவர் விடுதி, வரதராசன்பேட்டை
 6. பள்ளி மாணவர் விடுதி, ஏலக்குறிச்சி
 7. பள்ளி மாணவர் விடுதி, செந்துறை
 8. பள்ளி மாணவர் விடுதி, சுண்டக்குடி
 9. பள்ளி மாணவியர் விடுதி, மேலணிக்குழி
 10. பள்ளி மாணவியர் விடுதி, ஏலாக்குறிச்சி
 11. பள்ளி மாணவியர் விடுதி, மீன்சுருட்டி
 12. பள்ளி மாணவியர் விடுதி, இரும்புலிக்குறிச்சி
 13. பள்ளி மாணவியர் விடுதி, டி.பழூர்
 14. பள்ளி மாணவியர் விடுதி, ஆண்டிமடம்
 15. பள்ளி மாணவியர் விடுதி, வரதராஜன்பேட்டை (இ ) தென்னூர்,

மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள்

 1. கல்லூரி மாணவர் விடுதி, அரியலூர்
 2. தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி, கீழப்பழூர்
 3. கல்லூரி மாணவியர் விடுதி, அரியலூர்
 4. பள்ளி மாணவர் விடுதி, பொன்பரப்பி
 5. பள்ளி மாணவர் விடுதி, உடையார் பாளையம்
 6. பள்ளி மாணவர் விடுதி, திருமழப்பாடி
 7. பள்ளி மாணவர் விடுதி, திருமானூர்
 8. பள்ளி மாணவர் விடுதி, மீன்சுருட்டி
 9. பள்ளி மாணவர் விடுதி, ஆண்டிமடம்
 10. பள்ளி மாணவர் விடுதி, ஜெயங் கொண்டம்
 11. பள்ளி மாணவர் விடுதி, மருதூர்
 12. பள்ளி மாணவர் விடுதி, சுத்தமல்லி
 13. பள்ளி மாணவர் விடுதி, இரும்புலிக்குறிச்சி
 14. பள்ளி மாணவர் விடுதி, கோடாலிகருப்பூர்
 15. பள்ளி மாணவர் விடுதி, டி.பழூர்
 16. பள்ளி மாணவியர் விடுதி, பொன்பரப்பி
 17. பள்ளி மாணவியர் விடுதி, ஜெயங் கொண்டம்

உணவு கட்டணம்

 • பள்ளி விடுதி – ஒரு மாணவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.1000/- வீதம் 10 மாதங்களுக்கு (01.01.2021 முதல்)
 • கல்லூரி விடுதி – ஒரு மாணவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.1100/- வீதம் 10 மாதங்களுக்கு (01.01.2021 முதல்)

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படவேண்டிய உணவு வகைகள் அடங்கிய திருத்தப்பட்ட உணவுப் பட்டியல்

அரசாணை (நிலை) எண்.26, பி.வ. மி.பி.வ. (ம) சி.பா. நல (பிந1(2))த்துறை, நாள்.25.03.2022 ன் படி கீழ்க்காணும் உணவுப்பட்டியல் 03.06.2022 முதல் அமுலுக்கு வருகிறது.

காலை (பள்ளி மற்றும் கல்லூரி)
கிழமை உணவு வகைகளின் விபரம்
திங்கள் சேமியா கிச்சடி, தக்காளி சட்னி / சாம்பார்
செவ்வாய் பூரி, மசால்
புதன் இட்லி, சாம்பார் , சட்னி
வியாழன் இடியாப்பம், பட்டாணி குருமா (அல்லது) தேங்காய் பால்.
வெள்ளி பொங்கல் (அல்லது) வரகு பொங்கல் (அல்லது) தினை அரிசி பொங்கல், கத்தரிக்காய் கொத்சு, வடை.
சனி ரவா கிச்சடி, தேங்காய் சட்னி
ஞாயிறு தோசை (அல்லது) நவதானிய தோசை, சாம்பார், சட்னி
மதியம் (பள்ளி மற்றும் கல்லூரி)
கிழமை உணவு வகைகளின் விபரம்
திங்கள் சாதம், சாம்பார், இருவகை பொரியல், ரசம், மோர், முட்டை (அல்லது) சாதம், சாம்பார், 1 பொரியல், ரசம், மோர், முட்டை மசாலா.
செவ்வாய் காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை
புதன் சாதம், ஆட்டிறைச்சி / கோழி குருமா (அல்லது) மட்டன் / சிக்கன் குழம்பு, பொரியல், மோர்
வியாழன் தக்காளி சாதம் (அல்லது) லெமன் சாதம் (அல்லது) தயிர் சாதம், உருளை பொரியல், முட்டை
வெள்ளி சாதம், காரக்குழம்பு , பொரியல் / கூட்டு, ரசம், மோர், முட்டை.
சனி புதினாசாதம் (அல்லது) காரட் சாதம் (அல்லது) கறிவேப்பிலை சாதம், முட்டை, அப்பளம் / பருப்பு துவையல்
ஞாயிறு சாதம், முட்டை குருமா, ரசம், மோர்
இரவு (பள்ளி மற்றும் கல்லூரி)
கிழமை உணவு வகைகளின் விபரம்
திங்கள் சப்பாத்தி, குருமா
செவ்வாய் இடியாப்பம், குருமா (அல்லது) காய்கறி கூட்டு (Vegetable Stew)
புதன் காய்கறி புலாவ், குருமா / ரைத்தா
வியாழன் ஊத்தாப்பம், சட்னி, சாம்பார்
வெள்ளி கோதுமை தோசை, தக்காளி சட்னி
சனி பசாதம், சாம்பார், பொரியல், ரசம்
ஞாயிறு தக்காளி சாதம் (அல்லது) சாம்பார் சாதம், வறுவல்
ஆட்டிறைச்சி / கோழி இறைச்சி வாரத்திற்கு ஒரு நாள்
நாள் கல்லூரி விடுதி பள்ளி விடுதி
1 -வது மற்றும் 3-வது வாரம் (புதன் கிழமை) ஆட்டிறைச்சி – 80 கிராம் வீதம் ஆட்டிறைச்சி – 80கிராம் வீதம்
2-வது மற்றும் 4-வது வாரம் (புதன் கிழமை) கோழி இறைச்சி – 120 கிராம் வீதம் கோழி இறைச்சி –100 கிராம் வீதம்

முட்டை/வாழைப்பழம் (பள்ளி மற்றும் கல்லூரி)

நாள்தோறும் வழங்கப்படும் உணவு வகைகளுடன் வாரத்திற்கு ஐந்து முட்டைகள் என ஒரு மாதத்திற்கு ஒரு மாணவருக்கு 20 முட்டைகள் முட்டை சாப்பிடாத மாணவ, மாணவியருக்கு ஒரு வாழைப்பழம்.

மாலை நேர சிற்றுண்டி (பள்ளி மற்றும் கல்லூரி)

நாள்தோறும் மாலை நேரங்களில் வேகவைத்த பயிறுகள் (சுண்டல்) மற்றும் சுக்குமல்லி காபி / கருப்பட்டி தேநீர்.

விடுதி மாணவ / மாணவியரின் நலனுக்காக விடுதிகளில் செய்து தரப்படும் வசதிகள்

 1. தினசரி நிகழ்வுகளை அறிந்துக் கொள்ள ஒவ்வொரு விடுதிக்கும் இரண்டு தமிழ் மற்றும் ஒரு ஆங்கிலம் நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன.
 2. 10, 12 ஆம் வகுப்பு கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து அவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த “வாழ்க்கை வழிகாட்டி” நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடத்தப்படுகிறது.
 3. விடுதிகளில் தங்கிப்பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிட, அவர்களுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன.
 4. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு 12 ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடப்புத்தகங்களும் இலவசமாக பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்படுகின்றன.
 5. 2013-2014 ஆம் ஆண்டு முதல், 4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, சத்துணவுத் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்றே, வண்ணம் மற்றும் வடிவமைப்பில் நான்கு இணை சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 6. விடுதிகளில் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி, விளையாட்டு உபகரணங்கள், நீர் சுத்திகரிப்புக்கருவி, புத்தக அலமாரிகள், மாவரைக்கும் இயந்திரம், நீராவி வேகவைப்பான்கள், மின்அரைப்பான், சுகாதார குட்டைத் தகளி, தீயணைப்பான் கருவிகள், இட்லி வேகவைப்பான்கள், உடனடி மாவரைக்கும் இயந்திரம், நீராவி கொதிகலன், நூலகப் புத்தகங்கள் மற்றும் பூச்சி அழிப்பான் மின் கருவி ஆகியன வழங்கப்படுகின்றன. இவற்றுடன் கல்லூரி விடுதிகளுக்கு இன்வர்ட்டர் கருவி, பார்வை குறிப்புப் புத்தகங்கள் மற்றும் இரண்டடுக்கு கட்டில்கள் வழங்கப்படுகின்றன.
 7. எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்கப்படுகின்றன. மலைப் பிரதேச விடுதிகளின் மாணவ, மாணவியருக்கு கம்பளி ஆடை வழங்கப்படுகிறது. மேலும், விடுதிகளில் மாணவ, மாணவியருக்கு பின்வரும் வசதிகள் செய்து தரப்படுகின்றன:-
  • பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்கள் வழங்கப்படுகிறது.
  • கல்லூரி விடுதியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் ஜமக்காளங்கள் வழங்கப்படுகிறது.
  • பள்ளி, கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படுகிறது.
 8. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களின் உடல் நலனை பேணும் பொருட்டு விடுதிகளில் ஆண்டு தோறும் மூன்று முறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

விடுதிகளுக்கு உணவு மானியம் வழங்குதல்

சலுகைகள்

இத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் பிவ / மிபிவ / சீம மாணவ, மாணவியருக்கு மாதாந்திர உணவு மான்யம் 01.01.2021 முதல் ரூ.1000/- வழங்கப்படுகிறது.

தகுதி

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலர்

திருவள்ளுவர் அனாதை இல்லம் தலைவர் மூலமாக கேட்புப் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களால் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தனியே விண்ணப்பம் ஏதும் அளிக்கத் தேவையில்லை.

கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குதல் (மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினருக்கு மட்டும்)

ஊக்கத்தொகை

3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை – ஆண்டுக்கு ரூ.500/- 6-ஆம் வகுப்பு – ஆண்டுக்கு ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

தகுதி

 • பெற்றோர்களது ஆண்டு வருமானவரம்பு 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 • கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில வேண்டும்.
 • மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.
 • ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்மந்தப்பட்ட கிராமப்புற அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
இத்திட்டம் சென்னை மாவட்டம் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இலவச மிதிவண்டிகள் வழங்குதல்

திட்டம் பற்றிய விவரம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருமானம் மற்றும் சாதி பாகுபாடின்றி இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

தகுதி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் வேண்டும். (இலவச பேருந்து பயண அட்டை பெறும் மாணவ / மாணவியருக்கும் இச்சலுகை பொருந்தும்.)

 • இச்சலுகை பெற எவ்வித நிபந்தனையும் இல்லை.
 • பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியுள்ளோர் மற்றும் உண்டி, உறைவிடப் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் மிதிவண்டிகள் பெறுவதற்கு தகுதியற்றவர் ஆவர்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார முன்னேற்றத்திற்காக பித்தளை தேய்ப்புப்பெட்டிகள் மற்றும் மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு வருவாய் ஈட்டும் செயல்பாடுகளுக்காக கடன்கள் வழங்கப்படுகின்றன.

பித்தளை தேய்ப்புப் பெட்டிகள் வழங்குதல்

 • பிவ / மிபிவ / சீம வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
 • குடும்ப ஆண்டு வருமானவரம்பு 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 • வயதுவரம்பு – 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குதல்

 • பிவ/மிபிவ/சீம வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
 • குடும்ப ஆண்டு வருமானவரம்பு 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 • துணி தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
 • வயது : 21 – 45 வரை.
 • விதவை / கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
 • ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதிபெற்றவராவர்.
 • ஒரு முறை பயன்பெற்ற பயனாளி மீண்டும் விண்ணப்பிக்க 7 ஆண்டு காலம் பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்

 1. நிலமற்ற, வீடற்ற ஏழை, பிவ / மிபிவ / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
 2. குடும்ப ஆண்டு வருமானவரம்பு 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சீர்மரபினர் நல வாரியம்

சீர்மரபினர் வகுப்பினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக “சீர்மரபினர் நல வாரியம்” 2007-ஆம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர்
சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த வலையர் மற்றும் சேர்வை இனத்தவர்களின் நலனுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த “வலையர், அம்பலக்காரர் (சேர்வை உட்பட) புனரமைப்பு வாரியம்” அமைத்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்

நரிக்குறவர்களுக்கு கல்வி, மாற்று தொழில் புரிவதற்கான உதவி ஆகியவற்றை அளிக்கவும், அவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் 2008-ஆம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனிநபராகத் தொழில் துவங்க ரூ.7,500/- மானியமும், குழுவாகத் தொழில் துவங்க அதிகபட்சமாக ரூ.1,25,000/- பின்நிகழ்வு மானியமும் (Back ended subsidy) வழங்கப்படுகிறது. இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்கள், நலத்திட்ட உதவிகளைப் பெற அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

நரிக்குரவர்

தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் நிர்வாகக் குழுமம்

அரசு, 2009-ஆம் ஆண்டு வன்னியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக, பல வன்னியர் வள்ளல்களால் உயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு, அவைகளை ஒருங்கிணைத்து, அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக, வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தினை உருவாக்கியது.
வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தைச் சார்ந்த நபர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அத்தகைய பொறுப்பாட்சிகளின் சொத்துக்களையும், நிலைக்கொடைகளின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு, “தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம், 2018″ என்ற சட்டம் இயற்றப்பட்டு 04.02.2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தின்கீழ் “தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியம்” ஒரு தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் உறுப்பினர் – செயலாளர் ஒருவரும், இரண்டு அரசு சார்பான உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும், 23 பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. இவ்வாரியத்தின் நிர்வாக செலவுகளுக்காக 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.1 கோடி ஒப்பளிக்கப்பட்டது. இவ்வாரியத்தால் இதுவரை 97 அறக்கட்டளைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 36 அறக்கட்டளைகள் இவ்வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட இந்த 36 அறக்கட்டளைகளின் சொத்துக்களின் பட்டியலை இச்சட்டப்பிரிவு 5-ன்படி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுவதற்கு இவ்வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகப் போராடியவர்களை சிறப்பு செய்யும் பொருட்டு ஆண்டு தோறும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை அரசு வழங்கி வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு சவரன் தங்கப் பதக்கமும், 2021-22 ம் ஆண்டு முதல் ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.5.00 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலகம்,
முதல் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,
அரியலூர்.
தொலைபேசி எண் : +91-9445477837
தொலைபேசி எண் : 04329- 228055 / 228225 / 228151
மின்னஞ்சல் முகவரி : dbcwari[at]nic[dot]in