மூடுக

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

முன்னுரை

தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பிரிவானது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இத்துறையில் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளும் ஒரு பொது துறை நிறுவனமும் செயல்பட்டுவருகிறது :-

  • மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வை ஆணையரகம்
    (Commissionerate of Prohibition &Excise)
  • மதுவிலக்குஅமலாக்கப்பிரிவு
    (Prohibition Enforcement Wing)
  • போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு
    (Narcotic Intelligence Bureau CID)
  • தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம்
    (Tamil Nadu State Marketing Corporation Limited)

நோக்கங்கள்:-

  • 1937-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம்(தமிழ்நாடு சட்டம் X/1937) மற்றும் இச்சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள பல்வேறு விதிகளை நடைமுறைப்படுத்துதல்.
  • சிறந்த ஆயத்தீர்வை நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு அதிகப்பட்ச வருவாய் கிடைப்பதை உறுதி செய்தல்
  • பொதுமக்களிடையே மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு மேலாக்கப்பிரிவின் துணை கொண்டு விழிப்புணர்வ ஏற்படுத்துதல்
  • கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளச்சாராயம் விற்பனை செய்வதைத் தடுத்தல் மற்றும் மாநில எல்லை வழியாக போலி மதுபானம் வருவதை தடுக்க சோதனைகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணை ஆட்சியர்/உதவி ஆணையர்(கலால்) நிலையில் ஒரு அலுவலரும் மற்றும் வட்டாட்சியர் நிலையில் இரண்டு கோட்டக்கலால் அலுவலர்களும் (அரியலூர் மற்றும் உடையார்பாளையம் கோட்டம்) பணிபுரிந்து வருகின்றனர்.

மின்-ஆளுமை நடவடிக்கைகள்:-

உரிமங்கள் வழங்குதலில் வெளிப்படைத்தன்மையினை உருவாக்கவும், உரிமங்களை புதுப்பித்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான அனுமதி ஆணைகள் வழங்குவதற்குரிய கால அவகாசத்தினை வெகுவாக குறைக்கும் வகையிலும் இணையதள செய்திகள் மூலமாக கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FL-3  உரிமங்களை, இணையதளம் வாயிலாக புதுப்பித்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு :-

ஒவ்வொரு  மாவட்டத்திலும் மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும் கீழ்கண்ட அலுவலர்களை உறுப்பினராகவும், கொண்ட மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது:

1 மாவட்ட ஆட்சியர் தலைவர்
2 மண்டல காவல் கண்காணிப்பாளர்(அமலாக்கம்) உறுப்பினர்
3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுப்பினர்
4 முதன்மைக் கல்வி அலுவலர் உறுப்பினர்
5 துணை ஆணையர்(கலால்)/உதவி ஆணையர்(கலால்) உறுப்பினர்- அமைப்பாளர்
6 மக்கள் தொடர்பு அலுவலர் உறுப்பினர்

அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நகைச்சுவை நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகித்தில், மனித சங்கிலி பேரணி போன்றவை மூலம் மாணவ, மாணவிகள் மூலம் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் துணை கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மது அருந்துவதால் பாதிக்கப்படக்கூடிய மக்களை உள்ளடக்கிய வாழ்விடங்களை விலக்காக கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.கள்ளச்சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்புடும் தீமைகள் குறித்து பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட்டுரை போட்டிகள் ஆகியவை பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணையவழி வாயிலாக நடத்தப்பட்டு வருகின்றன.  இவை தவிர பொதுமக்களுக்கு டி-சர்ட், பயணப்பை மற்றம் நாட்காட்டிகள் விநியோகிக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் தெரு நாடகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன் மாவட்ட வாரியாக பெரிய அளவிலான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு பேரணியின்போது மது அருந்துவதற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. போக்குவரத்து கழகங்களுக்கு மதுவிலக்கு விழிப்புணர்வு குறித்த ஒட்டும்வில்லைகள் அளிக்கபட்டு பேருந்துகளில் ஒட்டப்படுகிறது. மதுவிலக்கு விழிப்புணர்வு தொடர்பாக கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் மற்றும் குறும்படம் தயாரித்தல் போன்ற பிரிவுகளில் மாநிலம் தழுவிய போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு:-

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதை ஒழித்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுத்தல் ஆகியவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் முக்கிய பணிகளாகும்.

மாவட்ட அளவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உதவியாக கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(அமலாக்கப்பிரிவு), ஒரு காவல் ஆய்வாளர், 2 உதவி காவல் ஆய்வாளாகள்; மற்றும் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அண்டை மாநிலங்களிலிருந்து போலி மதுபானம் மற்றும் எரிசாராயம் கடத்தியவரை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:-

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நுண்ணறிவு தகவல்கள், அலைபேசி அழைப்புத் தகவல்கள் (CDR Analysis) ஆகியவற்றின் உதவியுடன் எரிசாராய கடத்தல், போலி மதுபான கடத்தல் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானக் கடத்தல் ஆகிய குற்றங்களை தடுப்பதுடன் இக்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அமலாக்க வழக்குகளில் கைப்பற்றப்பட்டு ஏலம் இடப்பட்ட வாகனங்கள் மீண்டும் அதே குற்றங்களுக்காக பயன்படுத்துவதை தடுக்கும்பொருட்டு வாகனங்கள் ஏலமிடப்படுவதை நிறுத்தி அவற்றை அரசுத்துறைகளின் பயன்பாட்டிற்கு உட்படுத்தவோ அல்லது விதிகளின்படி அழிக்கவோ அரசால் ஆணையிடப்படுகிறது.

சர்வதேச போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு நாள் அனுசரித்தல்:-

போதைப் பொருட்கள் பயன்படுத்துதலைத் தடுக்கவும் பொதுமக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பெருந்தொற்று காரணமாக சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் யுடியூப் சேனல்களில் விழிப்புணர்வு காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிரபல செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

போதைப் பொருள் குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைத்தல்:-

அரியலூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில்  07 போதைப் பொருள் குற்றவாளிகள், 08 கணினி வெளிச்சட்ட குற்றவாளிகள்,  அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடுச் சட்டம் 14/1982) சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், மதுபானக் கிடங்குகள், மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்:-

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு 53 சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இக்கடைகளுடன் இணைந்த 5 மதுக்கூடங்களும் உள்ளன.  மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 57 கடை மேற்பார்வையாளர்களும் 102 விற்பனையாளர்களும்; ஒப்பந்த/தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்பணியாளர்களுக்கான தொகுப்பூதியமானது உயர்த்தி வழங்கப்படுகிறது.

மதுபான வகைகள் கொள்முதல்:-

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மாநிலத்தில் இயங்கி வருகின்ற 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 5 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 2 ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் வகைகளைக் கொள்முதல் செய்து வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள் எச்சரிக்கை ஒலி சாதனங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் நிறுவுதல்:-

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் திருட்டு நடப்பதை தடுப்பதற்காகவும் அவற்றின பாதுகாப்பை மேம்படுத்தவும் அரியலூர்  மாவட்டத்தில் 53 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த கண்காணிப்பு கேமராக்கள் திருட்டுகளை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபடக்கூடிய தனிநபர்களை கண்டுபிடிக்கவும், மதுபானக் கடைகளின் அருகில் சந்தேகத்திற்குரிய நடவடிக்ககைகள் ஏதேனும் நடந்தால் அவற்றை அடையாளம் காணவும் வழிவகை செய்கிறது. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் நிகழ்வுகளில் சம்மந்தபட்ட மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கிடங்குகளிலும் மற்றும் அனைத்து மதுபான சில்லறை விறபனைக் கடைகளிலும் தீயணைப்புக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

மதுவிற்பனை இல்லாத நாட்கள்:-

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி தினம், திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், வடலூர் இராமலிங்கர் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மதுவிற்பனை இல்லாத நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, முக்கிய நிகழ்வுகளின் நாட்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்படைய நாட்கள் ஆகியன மதுவிற்பனை இல்லாத நாட்களாக அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன.

மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு நிதி:-

திட்டம் குறித்த விபரம்::

முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்விற்காக அரசால் நிதி உதவி கடனாக வழங்கபட்டது. தற்போது நிதி உதவியானது ரூ.5.00 கோடியாக மாநில அளவில் உயர்த்தபட்டு கடனாக இல்லாமல் மானியமாக வழங்கபட்டுவருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு பின்வரும் அலுவலர்களை உள்ளடக்கிய மறுவாழ்வு குழு அமைக்கபட்டு இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் தெரிவு செய்து அவர்களின் பொருளாதார மறுவாழ்விற்காக மானியம் வழங்கப்படுகிறது.

1 மாவட்ட ஆட்சியர் தலைவர்
2 மண்டல காவல் கண்காணிப்பாளர் உறுப்பினர்
3 முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம்) உறுப்பினர்
4 துணை ஆணையர்(கலால்)/உதவி ஆணையர்(கலால்) உறுப்பினர்

அடையாளம் கண்டறியப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் நிரந்தர வருவாய் ஈட்டும் பொருட்டு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வளர்த்தல், ஊதுபத்தி, கற்பூரம்,உடனடி சாம்பிராணி, மெழுகுவர்த்தி, காகிதக்குவளை, சலவை சோப்பு, சலவைத்தூள் ஆகியவற்றைத் தயாரித்தல் மற்றம் சிறு வியாபாரங்களை மேற்கொள்ள மானியமாக அதிகபட்சமாக ரூ.30,000/- வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்மூலம் 57 பயனாளிகள் 2021-2022 நிதியாண்டில் பயனடைந்துள்ளனர்.

தகுதி::

மதுகுற்றங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று மனம் திருந்தி மேற்படி தொழிலில் ஈடுபட்டிருக்கக்கூடாது.

விண்ணப்பிக்க வேண்டிய முறை::

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புபவர்கள், அதற்கான மனுவினை “மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர்” அல்லது “உதவி ஆணையர் (கலால்), பெரம்பலூர்” என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.  மனு கட்டணம் ஏதுமில்லை.