மூடுக

வரலாறு

அரியலூர் மாவட்டத்திற்கு தொன்மையான மற்றும் புகழ்வாய்ந்த வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலங்கள் 2 இலட்ச வருடங்களுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரீகத்திற்குக் கொண்டு செல்கிறது.

ஆழியின் கீழ் அரியலூர்

மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின் காலநிலைமாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது. இந்த பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் ‘கிரிட்டாசியஸ்’ காலம் என குறிப்பிடுகின்றனர்.

கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு இனங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்கள் ஆகின. எனவே அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் ‘புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இம்மாவட்டத்தில் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்காரணங்களால், இம்மாவட்டம் பழங்கால உயிரின படிமப் புதையல்களின் இருப்பிடமாக உள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய காலம் (கி.மு.2,00,000 இருந்து கி.பி 300 வரை)

வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்த பகுதி இம்மாவட்டத்தை உள்ளடக்கியது. நிண்ணியூர் , ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி, தத்தனூர் பொட்டகொல்லை,குணமங்கலம், மேலப்பழுவூர், கண்டிராதீர்த்தம், துளார் ஆகிய கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகள், பெருங்கற்களாலான பாத்திரங்கள் மற்றும் மண்பாண்டங்கள் வடிவில் உள்ளவை பண்பாட்டுத் தடயங்களாகின்றன.

சங்க காலம்(கி.மு.500 இருந்து கி.பி 300 வரை)

அரியலூர், சங்க காலத்தில் உறையூரை ஆண்ட சோழர்கள், கொல்லிமலையை ஆண்ட வில்வித்தையில் சிறந்தவரான மழவர் தலைவன் ஒரி ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மழவர் குல மக்கள், திருமழபாடி பகுதியில் மழவர் தலைவனின் படை முகாமில் பணியாற்றி வாழ்ந்து வந்தனர். மழவர்கள் திருமழபாடி மற்றும் ஒரியூரில் அரியலூர் மீதான தங்களது ஆட்சியை நிலைப்படுத்தினர். சங்க கால கடைசி அரசனான கோச்செங்கணானால் தோற்கடிக்கப்பட்ட விளந்தைவேல் அரசனின் தலைநகரமாக உடையார்பாளையம் வட்டத்திலுள்ள விளந்தை இருந்தது. இத்தலைநகரம், கரிகாலசோழனின் சமகாலத்திய, பிடவூர் இருங்கோவேள் ஆண்ட இருங்கோளப்பாடியின் ஒரு பகுதியாகிய விளந்தைகுர்ரமின் தலைமை இடமாக இருந்தது.

பல்லவர்கள் காலம்(கி.பி 6-9’வது நூற்றாண்டு)

இன்றைய அரியலூர் மாவட்டம் பல்லவ பேரரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. மகேந்திரவர்ம பல்லவர் கால நாணயங்கள், அரியலூர் அருகே கோவிந்தபுரம் எனுமிடத்தில் கிடைத்தது. பல்லவர்கள் காலத்திய ஸ்ரீவத்சம் எனும் (லட்சுமி) ஒரு கல் சிற்பம், அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பாதுகாக்கப்படுகிறது. மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்மவர்மன் காலத்தில் வாழ்ந்த, தேவார மூவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் கீழபழுவூர், திருமழபாடி, கோவிந்தப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை வழிபட்டு, தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

சோழப் பேரரசு காலம் (கி.பி 850-1279)

இன்றைய அரியலூர் மாவட்டம், பெருமைமிகு சோழர்களின் தொடக்க காலம் முதல் இறுதி காலம் வரை அவர்களது ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. சோழ அரசர்களான முதலாம் ஆதித்யன் (871-907) முதல் மூன்றாம் இராஜேந்திரன் (1246-1279) வரையிலான காலங்களில் பொறிக்கப்பட்ட 450 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இம்மாவட்டத்தில் கிடைக்கபெற்றுள்ளன. இவை சோழர்கால ஆட்சியின் அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. சோழ அரசர்களான முதலாம் ஆதித்யன் முதல் முதலாம் இராஜேந்திரன் வரை இவர்களின் ஆட்சியின் கீழ், நிலக்கிழார்களாக இருந்த பழுவேட்டரையர்கள் மேலப்பழுவூரை தலைநகராகக் கொண்டு அரியலூரை ஆண்டு வந்தனர். முதலாம் இராஜேந்திரன் காலத்திலிருந்து உடையார்பாளையம் வட்டத்திலுள்ள கங்கைகொண்டசோழபுரம் சோழப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. கி.பி 1027 இருந்து கி.பி 1279 வரை, முதலாம் இராஜேந்திரன் முதல் மூன்றாம் இராஜேந்திரன் வரை ஆண்ட 16 சோழ மன்னர்களின் ஆட்சியில், கங்கைகொண்டசோழபுரம் தென்னிந்தியா முழுமைக்கும் பெருமைமிகு தலைநகரமாக விளங்கியது.

திருமழபாடி மற்றும் விக்கிரமசோழபுரம் (தற்போதைய விக்கிரமங்கலம்) , சோழர்களின் ஓய்வு எடுக்கும் அரண்மனையாக இருந்தது. இராஜகம்பீரசோழபுரம் (தற்போதைய இராயம்புரம்), ஜெயங்கொண்டசோழபுரம், கொல்லாபுரம்,ஆவணிகந்தர்வபுரம் (தற்போதைய கீழையூர்), மதுராந்தகபுரம் (தற்போதைய பெரியதிருக்கோணம்) போன்ற பல வாணிப நகரங்கள் இருந்தன. மணிகிராமம், ஐநூறுவர், வலஞ்சியர் மற்றும் அஞ்சுவண்ணம் ஆகியவை, ஊர் ஊராகச் சென்று வாணிபம் செய்பவர்களின் மையங்களாகத் திகழ்ந்தன. இம்மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பெரும்பாலானவை, சோழர் காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றிற்கு திருமழபாடி, கீழையூர்(முதலாம் ஆதித்யன்), கீழபழுவூர்(முதலாம் பராந்தகன்), காமரசவல்லி(சுந்தரசோழன்), கோவிந்தப்புத்தூர்(உத்தமசோழன்), செந்துறை(முதலாம் இராஜராஜன்), சென்னிவனம், பெரியதிருக்கோணம், கங்கைகொண்டசோழபுரம் (முதலாம் இராஜேந்திரன்) மற்றும் ஸ்ரீபுரந்தான்(மூன்றாம் இராஜராஜன்) ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அழகிய எடுத்துக்காட்டுகளாகும்.

பாண்டிய மற்றும் ஹொய்சளர்கள் காலம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். மாறவர்மன் முதலாம் குலசேகர பாண்டியன் (1268-1318) கி.பி 1279 இல் தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தைக் கைப்பற்றி தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்தான். கி.பி.1255 முதல் 1370 வரை பாண்டியர்கள் இப்பகுதியை ஆண்டார்கள் என்பதை 49 கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

கொய்சள மன்னர்களான வீரநரசிம்மன், வீரசோமேஸ்வரன், ராமநாதன் ஆகியோர் சில காலம் இங்கு ஆட்சி செய்து சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனுக்குப் பாண்டியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள உதவினர். திருமழபாடி மற்றும் காமரசவல்லி ஆகிய இடங்கள் கொய்சளர்களின் படைமுகாமாக இருந்தன.

விஜயநகரப் பேரரசு (கி.பி 1371 – 1685) மற்றும் பாளையக்காரர்கள் (கி.பி. 1550 – 1817) காலம்

60 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்த பகுதியில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்ததைத் தெரிவிக்கின்றன. விஜயநகர அரசரான காம்பனா, முட்டுவாஞ்சேரியில் இருந்து இந்த மாவட்டத்தை ஆட்சி செய்ததை கி.பி 1372-ஆம் வருட குறிப்பு காட்டுகிறது. விஜய நகர அரசர்களின் கீழ், விளந்தையின் கச்சிராயர்கள் தொடர்ச்சியாக 7 அரசர்களுக்கு மேல் அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர். கி.பி 1573 இல் விஜயநகரத்தின் செஞ்சி நாயக்கன் மற்றும் முதலாம் ஸ்ரீரங்கன் ஆகிய அரசர்களின் கீழ் அரசு நிலையிட்ட கிருஷ்ணப்ப மழவராயர், அரியலூர் பாளையத்தை ஆண்டார்.கி.பி 1817 வரை 16 மன்னர்கள் அரியலூரில் ஆட்சி செய்தனர். அவர்கள் பல கோவில்களைக் கட்டி, கலை மற்றும் ஓவியங்கள் வளர பங்காற்றினர்.

இதேபோல் சின்ன நல்ல காலாட்கள் தோழ உடையார் உடையார்பாளையத்தில் பாளையக்காரர் அரசைத் தோற்றுவித்தார். அவர்கள் உடையார்பாளையத்தில் அழகிய கோவில்கள் மற்றும் அரண்மனைகளைக் கட்டி கலை மற்றும் ஓவியங்கள் வளர ஆதரவு அளித்தனர். இவை இன்றளவும் அவர்களது குடும்பத்தின் பெருமைமிகு ஆட்சியை நினைவுபடுத்துகின்றன.

பீஜப்பூர் சுல்தான், மராட்டியர்கள், கர்நாடக நவாப்புகள் மற்றம் ஆங்கிலேயர்கள் காலம்

பீஜப்பூர் சுல்தான்கள், இப்பகுதியை சில காலம் ஆண்டனர். ஷேர்கான் லோதி வாலிகண்டபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டு வந்தார். பின்னர் மராட்டிய அரசன் சிவாஜியால் கி.பி 1677 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். சிவாஜி திருமழபாடியில் சில காலம் முகாமிட்டு, பிற்காலத்தில் தஞ்சாவூரின் அரசராக இருந்த, தன் சகோதரர் ஈகோஜியுடனான முரண்பாடுகளைத் தீர்த்துக்கொண்டார். மொகலாய அரசன் ஔரங்கசீப் மராட்டியர்களிடமிருந்து கர்நாடகத்தைக் கைப்பற்றி, சுல்பிர்கான் மற்றும் சததுல்லா ஆகியோரை கர்நாடக நவாப்பாக நியமித்தான். அவர்கள் பாளையக்காரர் வசமிருந்த அரியலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினர். விஜய ஒப்பில்லாத மழவராயர் நவாப்புகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். கி.பி 1755 மற்றும் கி.பி 1757 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடகப் போர்களில், பிரெஞ்சுக்காரர்கள் அரியலூரைத் தாக்கினர். ஆனால், ஆங்கிலேயர்கள் அரியலூர் பாளையக்காரர்களைக் காப்பாற்ற படைகளை அனுப்பினர். கி.பி. 1780 இல் இரு பாளையக்காரர்கள் ஹைதர் அலியின் உதவியை நாடி, நவாப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டனர். ஆங்கிலேயர்களால் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட பின், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை ஏற்று அவர்களுக்குக் கப்பம் செலுத்தினர். இறுதியில் ஆங்கிலேயர்கள் கி.பி. 1801 இல் கர்நாடக அரசை வெற்றி கொண்ட பிறகு, அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையக்காரர்கள் அவர்களின் கீழ் ஜமீன்தார்களாக ஆனார்கள். சுதந்திரத்திற்குப்பிறகு கி.பி 1950 இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் , அரியலூர் மாவட்டம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது. அரியலூர் சபாபதி பிள்ளை, நடேச அய்யர், கணபதி ரெட்டியார், நடராஜன் பிள்ளை, எரவாங்குடி பத்மநாதன், அரியலூர் மானோஜிராவ், குப்புசாமி, அபரஞ்சி, அப்பாசாமி, வீரபத்திரன், ரங்கராஜன், விக்கிரமங்கலம் அழகேசம் பிள்ளை, மணக்கால் சதாசிவம் பிள்ளை ஆகியோர் இந்த மாவட்டத்தில் இருந்த முக்கிய சுதந்திரப் போராளிகளில் சில ராவர்.

தொகுப்பு

முனைவர். L. தியாகராஜன், வரலாற்று இணை பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி, அரியலூர்.

நன்றி.